FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது.

குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. 
 
நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள, ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள, வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில், திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ரங்கராஜன் கூறுகையில், ''பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு, எதுவும் கூற முடியாது,'' என்றார்.
 
இணை இயக்குனர், நாகராஜ முருகன் கூறுகையில், ''மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர், எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment