கலவை சாதம் திட்டத்துக்கு அரசு வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளதால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஆகியவற்றில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். சத்துணவு மையங்களில் ஒரே வகையிலான உணவு வழங்கப்படுவதை மாற்றி, பல வகையான கலவை சாதம் வழங்க அரசு முடிவு செய்தது. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், செலவினம், வேலைப் பளு உள்ளிட்ட சில காரணங்களால் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதில் சிக்கல் இருந்து வந்தது.
இதையடுத்து மதிப்பீடு மற்றும் திறனாய்வு துறையினர், திருவள்ளூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கலவை சாதம் குறித்து மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு, சென்னையை சேர்ந்த சமையல் வல்லுநர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து நகர் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள சத்துணவு மையங்களில் படிப்படியாக கலவை சாதம் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment