நாளை
காலை 6.45 மணிக்கு இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய் கிரகத்தின்
சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில் காணுங்கள்..
http://webcast.isro.gov.in/
செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும் மங்கள்யான் புதன்கிழமை, செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைகிறது.
பூமிப்பந்தின் மூலை முடுக்குகளையெல்லாம்
அலசி ஆராய்ந்து விட்ட மனிதன், அடுத்ததாக வேற்று கிரகத்தில் குடியேற இடம்
தேடிக்கொண்டு இருக்கிறான். அதற்கான முயற்சியில்தான் விண்வெளி
ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பூமிக்கு அருகில் உள்ள சந்திரனில் இறங்கி
அதன் ஜாதகத்தை தெரிந்து கொண்டு விட்ட பின்னர், அடுத்ததாக சூரிய
குடும்பத்தில் ஒன்றாக விளங்கும் சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய்
மீது விஞ்ஞானிகளின் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா,
ரஷியா நாடுகளும் ஐரோப்பிய விண்வெளி முகமையும் செவ்வாய்கிரகத்துக்கு
விண்கலங்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு உள்ளன.
அந்த வகையில், இந்தியாவும் செவ்வாய்
கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது. செவ்வாய் கிரகத்தை
பற்றி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மங்கள்யான்
என்ற விண்கலத்தை அங்கு அனுப்பி வைத்து உள்ளது. இந்த விண்கலம், சென்னையை
அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் கடந்த
ஆண்டு நவம்பர் மாதம் 5–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 10 மாதங்கள்
பயணம் செய்து செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையை மங்கள்யான்
அடைவதுதான் இந்த திட்டம்.
விஞ்ஞானிகளின் கணிப்புப்படி மங்கள்யானின்
பயணம் திட்டமிட்டபடி வெற்றிகரமாகவே அமைந்து உள்ளது. ஏவுதளத்தில் இருந்து
அனுப்பப்பட்ட மங்கள்யான் முதல் 2 நாட்கள் பூமிக்கு அருகில் சுற்று வட்ட
பாதையில் சுற்றிக் கொண்டு இருந்தது. முதன் முதலாக நவம்பர் 7–ந் தேதியும்
அதன்பிறகு 8, 10, மற்றும் 15–ந் தேதிகளிலும் மங்கள்யானின் உயரம்
படிப்படியாக உயர்த்தப்பட்டு நவம்பர் 30–ந் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி
மிகுந்த வேகத்தில் செலுத்தப்பட்டது. உயரத்தை உயர்த்துவதற்காகவும், செவ்வாய்
கிரகத்தை நோக்கி செலுத்துவதற்காகவும் மங்கள்யானில் உள்ள பிரதான என்ஜின் 7
முறை இயக்கப்பட்டது.
30–ந் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி
செலுத்தும் பணி முடிந்ததும், அந்த என்ஜினின் பணி நிறுத்தப்பட்டது. நவம்பர்
30–ந் தேதி பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்ட விண்கலம்
எந்திரத்தின் உதவி எதுவும் தேவை இல்லாமல் செவ்வாய் கிரகத்தை நோக்கி கருமமே
கண்ணாக மணிக்கு 80 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தனது பயணத்தை தொடர்ந்து
கொண்டு இருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்குள் மங்கள்யான்
செல்லும் நேரம் இதோ... நெருங்கிவிட்டது.
இதுதான் மிகவும் முக்கியமான காலகட்டம்.
மணிக்கு 80 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மங்கள்யான் தொடர்ந்து
இதே வேகத்தில் சென்றால், செவ்வாயின் ஈர்ப்பு சக்திக்குள் சிக்காமல் அதை
கடந்து சென்று சூரியனை சுற்ற ஆரம்பித்துவிடும். அப்படி ஒரு துரதிருஷ்டமான
நிலை ஏற்படுமானால், மங்கள்யான் திட்டத்துக்காக செலவிடப்பட்ட 450 கோடி
ரூபாயும் வீண்தான்.
எனவே இந்த வேகத்தை குறைத்தாக வேண்டும்.
அதாவது மணிக்கு 5,700 கிலோ மீட்டர் அளவுக்கு மங்கள்யானின் வேகத்தை குறைக்க
வேண்டும். அப்படி குறைத்தால்தான் அது செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு
சக்திக்குள் சிக்கி, அதன் சுற்று வட்ட பாதையில் சுற்றத் தொடங்கும்.
இதற்காக, கடந்த நவம்பர் 30–ந் தேதியில் இருந்து சுமார் 300 நாட்கள்
இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விண்கலத்தின் பிரதான என்ஜின்
இயக்கப்பட உள்ளது. அதாவது விண்கலத்தின் வேகத்தை குறைப்பதற்காக என்ஜினை
திருப்ப முடியாது என்பதால், அதற்கு பதிலாக விண்கலத்தை எதிர்திசையில்
திருப்பி என்ஜின் இயக்கப்படும்.
இப்படி சுமார் 23 நிமிடம் அந்த என்ஜினை
இயக்கியதும் விண்கலத்தின் வேகம் குறைந்து அது செவ்வாய் கிரகத்தின்
சுற்றுவட்ட பாதையிலேயே நிலை கொண்டுவிடும். மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்
கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதுதான் இந்த திட்டத்தின் மிக
முக்கியமான கட்டம் ஆகும். இந்த பணி வருகிற 24–ந் தேதி காலை நடைபெறுகிறது.
அன்று காலை 6.57 மணிக்கு விண்கலத்தின் வேகம் விநாடிக்கு 22 கிலோ மீட்டராக
குறைக்கப்படும்.
அடுத்ததாக 7.18 மணிக்கு திரவ எரிபொருள்
உதவியுடன் இயங்கும் விண்கலத்தில் உள்ள அபோஜி என்ஜின் தொடர்ந்து 24 நிமிடம்
இயக்கப்படும். அப்போது விண்கலத்தின் வேகம் மணிக்கு 5.1 கிலோ மீட்டராக
இருக்கும். ஒவ்வொரு வினாடிக்கும் விண்கலத்தின் வேகம் 1.1 கிலோ மீட்டராக
குறைந்து கொண்டே வரும். 24 நிமிடங்கள் என்ஜின் இயங்கி நிற்கும் சமயத்தில்,
விண்கலத்தின் வேகம் வினாடிக்கு 4.3 கிலோ மீட்டராக குறைந்து, செவ்வாய்
கிரகத்தின் ஈர்ப்புசக்தி வட்டத்துக்குள் விண்கலம் சென்றுவிடும்.
அதன்பிறகு, மங்கள்யான் விண்கலம்
செவ்வாயில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி அந்த கிரகத்தை
நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். அதாவது செவ்வாய் கிரகத்துக்கு அருகில்
வரும் போது 365 கிலோமீட்டர் தொலைவிலும். தூரத்தில் வரும் போது 80 ஆயிரம்
கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும். அப்படி சுற்றி வரும் போது அதில் உள்ள
சக்தி வாய்ந்த கேமராக்கள் செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து தரை
கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பும். மேலும் அதில் உள்ள கருவிகள்
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பற்றிய தகவல்களையும் சேகரித்து அனுப்பி
வைக்கும்.
24–ந் தேதி காலையில் அபோஜி என்ஜினை
இயக்குவதற்கான ஆணைகள் அனைத்தும் விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவு
செய்யப்பட்டு உள்ளன. அந்த என்ஜின் 10 மாதங்களாக இயங்காமல் இருப்பதால்,
கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த என்ஜினை இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கிப்
பார்க்கின்றர்.
மங்கள்யான் விண்கலத்தின் தரை
கட்டுப்பாட்டு மையங்கள் பெங்களூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள
கோல்டுஸ்டோன், ஸ்பெயினில் உள்ள மாட்ரிட், ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா
ஆகிய இடங்களில் உள்ளன. மங்களகரமாக தொடங்கிய மங்கள்யானின் பயணம் இதுவரை
மங்களகரமாகவே நடந்து கொண்டு இருக்கிறது. புதன்கிழமை செவ்வாய் கிரகத்தின்
சுற்று வட்ட பாதைக்குள் மங்கள்யானை செலுத்தும் பணியும் வெற்றிகரமாகவே
அமைந்து இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமையை தேடித்தரும் என்று நம்புவோம்.
இந்தியாவுக்கு பெருமை
* செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக 2008
மற்றும் 2012–ம் ஆண்டுகளில் அமெரிக்கா விண்கலங்களை அனுப்பியது. 2008–ல்
அனுப்பப்பட்ட விண்கலத்தில் உள்ள பீனிக்ஸ் என்ற ஆய்வு வாகனம் செவ்வாய்
கிரகத்தின் வட துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்தது. 2012–ல் அனுப்பப்பட்ட
விண்கலத்தில் இருந்த ஆய்வு வாகனமும் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில்
தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்பியது.
* 2011–ம் ஆண்டு ரஷியா அனுப்பிய
விண்கலத்தின் போபாஸ்–கிரன்ட் ஆய்வு வாகனமும் செவ்வாய் கிரகத்தில் இறங்கி
அங்குள்ள மண்ணை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.
* ஐரோப்பிய விண்வெளி முகமை அனுப்பிய
‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண்கலம் 2003–ம் ஆண்டு டிசம்பர் 25–ந் தேதி
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தது.
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி
ஆய்வு முகமையை அடுத்து இந்தியாவும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய மைல்
கல்லை எட்டி சாதனை படைக்க இருக்கிறது.
நரேந்திர மோடி நேரில் பார்வையிடுகிறார்
மங்கள்யான் திட்டத்தில், அந்த விண்கலம்
செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி வட்டத்துக்குள் செலுத்தப்படுவதுதான்
முக்கியமான கட்டம் என்பதால், அந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி
முடிப்பதிலும், கண்காணிப்பதிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக உள்ளனர்.
இதை நேரில் பார்வையிடுவதற்காக, இஸ்ரோ
தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற
23–ந் தேதி மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூர் வருகிறார்.
அன்று இரவு அங்குள்ள கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் 24–ந் தேதி
காலை பெங்களூர் பீன்யா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள இஸ்ரோவின் தரை
கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்துக்கு சென்று, மங்கள்யான் செவ்வாய்
கிரக சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்தப்படும் பணியை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு
அவர் ஹெலிகாப்டர் மூலம் தும்கூர் சென்று, கோவரஹள்ளி என்ற இடத்தில்
அமைக்கப்பட்டுள்ள உணவு பூங்காவை தொடங்கி வைக்கிறார். பின்னர் பெங்களூர்
திரும்பி பிற்பகல் 1 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
No comments:
Post a Comment